Wednesday, 25 July 2012

யாழ்~ பண்டைய தமிழ் இசைக்கருவி

*யாழ் என்பது ஒரு இசைக்கருவி. தந்திக்கருவிகளில் முதலில் தோன்றியது யாழ். விஷ்ணுவிற்கும், சிவபெருமானுக்கும் உடம்பில் ஓடுகின்ற ஒரு நாடியின் பெயரும் யாழ். ராமாயணத்தில் ராவணன் தனது உடம்பில் ஒரு நரம்பை அறுத்து அதை வாசித்து இறைவனை வணங்கினான் என ராமாயணம் கூறுகிறது. யாழின் முதல் உருவம் அதுவே. அண்ட சராசரத்தின் ஒலியே யாழிலிருந்து எடுக்கப்பட்டது என புராணம் கூறுகிறது.யாழிலிருந்து பிறந்தது பண். யாழ் ஒலி அதிர்வுகள் அதிகம் இல்லாதது,மென்மையானது, பணிவின் இலக்கணமாக கூறப்படுகிறது. யாழ் என்பதற்கு நரம்புகளால் யாக்கப்பட்டது அல்லது கட்டப்பட்டது என்பது பொருள. குறிஞ்சி நிலத்தில் பயன்பாட்டில் இருந்த கருவிகளின் ஒன்று வில். வில்லில் முறுக்கேற்றிக் கட்டப்பெற்ற நாணிலிருந்து அம்பு செல்லும்பொழுது தோன்றிய இசையே யாழின் உருவாக்கத்திற்கு தோற்றுவாயக் இருக்க வேண்டும். இந்த வில்லே வில்யாழாக மலர்ந்தது. இதன்"இசையொலி பெருக்கி" (resonator) "தணக்கு" எனும் மரத்தால் செய்யப்பட்டது. இது படகு வடிவமாய் இருக்கும். மேலே தோலால் மூடப்பட்டிருக்கும். இந்தத் தோலுக்குப்"போர்வைத்தோல்" என்று பெயர். போர்வைத்தோலின் நடுவிலுள்ள மெல்லிய குச்சியின் வழியாக நரம்புகள் கிளம்பி மேலே உள்ள தண்டியுடன் பிணைக்கப்பட்டிருக்கும். சில யாழ்களில் "மாடகம்"அல்லது "முறுக்காணிகள்" இருந்தன. அத்தகைய யாழ்களில் நரம்புகள் தண்டியின் துவாரங்களின் வழியாகச் சென்று முறுக்காணிகளில் சுற்றப்பட்டிருக்கும். சிலவற்றில் நரம்புக்கட்டு அல்லது வார்க்கட்டு தண்டியில் வரிசையாகக் காணப்படும். வார்க்கட்டுகளை மேலும் கீழுமாக நகர்த்தி நரம்புகளைச் சுருதி கூட்டினர். கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய கல்லாடம் என்னும் நூல் யாழ் வகைகளைப் பற்றுக் கூறுகிறது. * "வில்யாழ்"(21 நரம்புகளை உடையது) * "பேரியாழ்" (21 நரம்புகளை உடையது) * "மகரயாழ்" (17 அல்லது 19 நரம்புகளை உடையது) * "சகோடயாழ்" (16 நரம்புகளை உடையது) * "கீசக யாழ்" (14 நரம்புகளை உடையது) * "செங்கோட்டியாழ்" (7 நரம்புகளை உடையது) * "சீரியாழ்" (7 நரம்புகளை உடையது) இவற்றைவிட நாரதயாழ், தும்புருயாழ், மருத்துவயாழ், ஆதியாழ் (100 நரம்புகளை உடையது) எனப்பல வகைகள் இருந்ததாக பண்டைய நூல்கள் கூறுகின்றன. மகர யாழ் யவன தேசத்திலிருந்து எடுத்துவரப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

2 comments:

  1. நல்ல தகவல்............

    BY
    G.RAJENDRAN
    http://gnanarajendran.blogspot.in/

    ReplyDelete